தருமபுரி – ஜனவரி 29:
தருமபுரி அருகே கிருஷ்ணகிரி–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று விடியற்காலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில், டூரிஸ்ட் வேன் மீது லாரி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பழைய மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மற்றும் அவரது மனைவி சாவித்திரி (53) ஆகியோர், குடும்ப உறவினர்களுடன் சேர்ந்து மொத்தம் 24 பேர் (7 குழந்தைகள், 9 பெண்கள், 8 ஆண்கள்) சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள குலதெய்வ பெருமாள் கோயிலுக்கு வழிபாடு மேற்கொள்ள மினி டூரிஸ்ட் வேனில் நேற்று இரவு 11 மணியளவில் புறப்பட்டுள்ளனர். வேனை லட்சுமிபதி என்கிற குமரேசன் ஓட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை கிருஷ்ணகிரி–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய நீதிமன்றம் (புதிய கோர்ட்) எதிரே, பயணிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக வேனை சாலையோரம் நிறுத்தியபோது, பின்னால் காட்டன் துணி பாரம் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தியிருந்த வேன் மீது மோதியது. இந்த தாக்கத்தில் டூரிஸ்ட் வேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் லட்சுமிபதி (எ) குமரேசன் மற்றும் சாவித்திரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தனர். மேலும் தருண் (15), கண்ணு (42), மாதிரி (39) ஆகிய மூவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்த அதியமான் கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்கள் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்து, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
.gif)

.jpg)