தருமபுரி, ஜன. 29:
தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில், தேநீர் கடை மற்றும் பேக்கரி விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக நெகிழி கவர்களில் சூடான டீ, காபி, பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட திரவ உணவுப் பொருட்களை பார்சலிடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டன. தருமபுரி முந்தைய மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு. கைலாஷ்குமார் தலைமையேற்றார். தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்புரை ஆற்றினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
தலைமை உரையில் பேசிய மாவட்ட நியமன அலுவலர், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகளில் சூடான தேநீர், காபி, பால் உள்ளிட்டவற்றை ஊற்றுவதால், பிளாஸ்டிக்கில் உள்ள மைக்ரோ நுண்துகள்கள் உணவுடன் கலந்து நுகர்வோரின் உடலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரித்தார். இதனால் நுரையீரல் பாதிப்பு, மலட்டுத்தன்மை, கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு, குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள் மற்றும் பெரியவர்களுக்கு புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட நெகிழி கவர்களில் சூடான உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுட்டிக்காட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதை நினைவூட்டினார். இதனை கருத்தில் கொண்டு, விற்பனையாளர்கள் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
நுகர்வோர் தங்களுடன் பாத்திரம், பிளாஸ்க் அல்லது கொள்கலன்கள் கொண்டு வந்து பார்சல் வாங்கும் பட்சத்தில், 5 முதல் 10 சதவீதம் வரை சலுகை வழங்கும் நடைமுறையை விற்பனையாளர்கள் கடைப்பிடிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், அனைத்து விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று பெற்றே விற்பனை செய்ய வேண்டும் என்றும், தரமான மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தேயிலை கலப்படம் கண்டறிதல் குறித்து நேரடி செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது. மேலும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் காகிதங்களில் எண்ணெய் பலகாரங்கள், உணவுப் பொருட்களை பார்சலிடுவதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஸ்ரீதர், பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் மற்றும் அவை கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் நகராட்சி மன்ற உறுப்பினரும் தேநீர் கடை உரிமையாளருமான திரு. சம்பந்தம் (பாலன்), மாசு கட்டுப்பாட்டு வாரிய கணினி இயக்குநர் தங்கதுரை, ஆவின் மார்க்கெட்டிங் பிரதிநிதிகள், ஆவின் கடைக்காரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட தேநீர் கடை விற்பனையாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பங்கேற்று, பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பெற்றுக் கொண்டனர்.
.gif)

.jpg)
.jpg)