தருமபுரி, ஜன. 29 :
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருந்தகம், பொது மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நலப் பிரிவு, பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள் பிரிவு, விஷ முறிவு சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து சிகிச்சைப் பிரிவுகளையும் பார்வையிட்டார். நோயாளிகள் பதிவு செய்யும் நடைமுறைகள், பதிவேடுகள் பராமரிப்பு, மருந்து இருப்புகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவமனை வளாகம் முழுவதும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எந்தவித குறையும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிறந்த சிகிச்சை வழங்குவதில் அலட்சியம் இருக்கக் கூடாது என மருத்துவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டொக்குபோதனஅள்ளி ஊராட்சியில் ஏரி புணரமைத்தல் நிதி (2024–2025) கீழ் ரூ.2.69 இலட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட சின்னப்பெருமன் ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடப்பட்டுள்ள சுமார் 300 மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து, தொடர்ந்து பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்டுகாரன்பட்டி ஏரியையும் பார்வையிட்ட அவர், ஏரியை தூய்மைப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும், நீர்ப்பிடிப்பு கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது நல்லம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் மரு. வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.
.gif)

.jpg)