தருமபுரி, ஜன.28:
தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம் அருகில், வட்டாரப் போக்குவரத்து துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி இன்று (28.01.2026) நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுவதன் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பேரணியை தொடங்கி வைத்த பின்னர் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், இருசக்கர வாகனம் ஓட்டும்போது அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவது அவசியம் என்றும் தெரிவித்தார். இதனால் விபத்து நேரங்களில் உயிரிழப்பும் கடுமையான காயங்களும் தவிர்க்கப்படலாம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும், அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது என்றும், மது அருந்திய நிலையில் அல்லது செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஓட்டுநர் உரிமமின்றி வாகனங்களை இயக்கக்கூடாது என்றும், குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் எந்தவித வாகனங்களையும் இயக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். விதிமுறைகளை மீறி விபத்து ஏற்படுத்தும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணி தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம் அருகில் தொடங்கி, இலக்கியம்பட்டி நான்கு ரோடு வழியாகச் சென்று மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் இருசக்கர வாகன விற்பனை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் ஓட்டுநர்களுக்கான சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு. சி.க. ஜெயதேவ்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு. அ.க. தரணீதர், திரு. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)