தருமபுரி, ஜன.28:
தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
இதன்படி, 27.01.2026 முதல் 06.02.2026 வரை பத்து நாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 01.02.2026 அன்று தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, 02.02.2026 அன்று மாலை 6.00 மணிக்கு விநாயகர் தேர்இழுத்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, 03.02.2026 அன்று காலை 8.00 மணி முதல் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் சுப்ரமணியர் தேர் நிலைபெயர்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதே நாளில் மாலை 5.00 மணிக்கு சுப்ரமணியர் தேர் இழுத்தல் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள், தீபாராதனைகள் மற்றும் பக்தர்களுக்கான வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதில் தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை தருமபுரி, குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின் செயல் அலுவலர் திரு. மு. முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, பக்திப் பூர்வமாக கலந்து கொள்ளுமாறும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.