தருமபுரி, ஜன. 22:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் “முதல்வரின் முகவரி” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் பெரும்பாலானவற்றுக்கு தீர்வு காணப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டந்தோறும் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, தற்போது “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, தருமபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,42,154 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 2,41,175 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் நேரடியாக பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

.jpg)