பாலக்கோடு, டிச. 01:
பாலக்கோடு அருகே பாறையூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஊர்மாரியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து ஆன்மிக நன்மை பெற்றனர். விழா கடந்த முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. இன்று அதிகாலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹுதி உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றன.
யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடம் கோவில் முக்கியஸ்தர்களால் தலைமீது எடுத்து வரப்பட்டு, கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் திருக்குட நன்னீராட்டு, தீபாரதனை ஆகியன நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஊர்மாரியம்மன் மீது அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. அலங்கார சீராட்டில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கும்பாபிஷேகத்தை காண பல்வேறு கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். விழாவை முன்னிட்டு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாறையூர் கிராம ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஒருங்கிணைத்து செய்து வைத்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 9843 663 662

.jpg)
.jpg)