தொப்பூர், டிச. 15:
தமிழ்நாட்டிலேயே அதிக விபத்துகள் நடைபெறும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாகக் கருதப்படும் தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தொடர் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம்–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல், சேலம்–தருமபுரி இடையே மலைப்பகுதியாக அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என போக்குவரத்துத் துறையும் காவல் துறையும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. நெடுஞ்சாலைத் துறையினரும் பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை சேலம் நோக்கி சென்ற ஒரு லாரி, முன்னால் சென்ற லாரி, இருசக்கர வாகனம், ஆம்னி வேன் மற்றும் கார் ஆகியவற்றின் மீது தொடர்ச்சியாக மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டது. இதில் தம்மணம்பட்டியைச் சேர்ந்த அருணகிரி, மாதேமங்கலத்தைச் சேர்ந்த கலையரசி, சங்கிரியைச் சேர்ந்த முனியப்பன், தினேஷ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த 3 பேரை காவல் துறையினர் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்ததால், பின்னால் வந்த வாகனங்கள் செல்ல வழியின்றி நின்றன. இதனால் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று, போக்குவரத்து சிறிது நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.
@ தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)