தருமபுரி, டிச. 13:
தேர்தல் வாக்குறுதியின்படி ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ–ஜியோ சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். ஜாக்டோ–ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ரக்க்ஷித் துவக்க உரையாற்றினார். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் காமராஜ் நிறைவுரையாற்றினார்.
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணையை ரத்து செய்ய வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 30 சதவீதத்திற்கும் மேலான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பை 5 சதவீதமாக குறைத்ததை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 21 மாத ஊதியமாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஜாக்டோ–ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)
.jpg)