தருமபுரி, டிச. 13:
தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்டு, காசிக்கு அடுத்ததாக காலபைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் ஆலயத்தில் இன்று காலபைரவர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. அதேபோல், ஜெயந்தி விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், நெய், இளநீர் உள்ளிட்ட 16 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து தங்க கவசத்தில் ராஜ அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது. இந்த அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜெயந்தி விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவரை தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக மேற்கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)