எழுதவும் படிக்கவும் தெரியாத அனைவருக்கும் அடிப்படை கல்வியறிவு வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், 2025–26 ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு தருமபுரி மாவட்டத்தில் 14.12.2025 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 2,757 தேர்வு மையங்களில் மொத்தம் 63,665 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தினமும் இரண்டு மணி நேரம் வீதம், ஆறு மாத காலத்திற்கு அனுபவமிக்க தன்னார்வலர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் சுமார் 80 சதவீதம் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், முதல் கட்டமாக நாடு முழுவதும் 15 முதல் 35 வயது வரையிலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2027 ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற இலக்குடன், வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து அமல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் இப்பணி நடைபெற்று வருகிறது. கல்வியறிவு, எண்ணியல் அறிவு மட்டுமின்றி, 21-ம் நூற்றாண்டில் ஒரு குடிமகனுக்குத் தேவையான வாழ்க்கைத் திறன்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த பாடத்திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதற்காக தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 140 பக்கங்களைக் கொண்ட பயிற்சி நூலை தயாரித்து வழங்கியுள்ளது.
பயிற்சியின் ஒரு பகுதியாக வங்கி, அஞ்சலகம், தொடர்வண்டி நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்ட பயிற்சியாளர்களுக்கு, சேமிப்பு கணக்கு தொடங்குதல், பணம் செலுத்துதல் மற்றும் பெறுதல், ஏடிஎம் இயந்திரம் பயன்படுத்துதல், தொடர்வண்டி மற்றும் பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்வது போன்ற நடைமுறை அறிவுகள் தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் நேரடியாக விளக்கப்பட்டன.
ஆறு மாத பயிற்சி நிறைவடைந்த நிலையில், 14.12.2025 அன்று நடைபெற்ற தேர்வில் அடிப்படைத் தமிழ், அடிப்படை ஆங்கிலம் மற்றும் அடிப்படை கணிதம் ஆகிய பாடங்களில் தலா 50 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை வினாக்கள் இடம்பெற்றன. தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அரசு சார்பில் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தேர்வு மையப் பொறுப்பாளர்களாக தன்னார்வலர்களும், கண்காணிப்பாளர்களாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் செயல்பட்டனர்.
டிசம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை அன்று தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாயக்கன் கொட்டாய் பள்ளியில் நடைபெற்ற தேர்வை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட இணை இயக்குநர் திரு.பொன்குமார் நேரில் பார்வையிட்டு தேர்வர்களை ஊக்கப்படுத்தினார். இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ஜோதி சந்திரா, உதவித் திட்ட அலுவலர் திருமதி.மஞ்சுளா, வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.கலைச்செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு.முல்லைவந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.மோகனப்பிரியா, ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு.மோகன், திருமதி.பானுரேகா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.சகிலா பிரேமா குமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)