Type Here to Get Search Results !

உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்த முயற்சி – தீக்குளிக்க முயன்ற விவசாயியை போலீசார் தடுத்தனர்.


பாலக்கோடு – டிசம்பர் 10:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி ஊராட்சி புங்கன்குட்டை பகுதியை சேர்ந்த விவசாயி அழகுவேல் (49) அவருக்கு சொந்தமான 1 ஏக்கர் விவசாய நிலம், அதியமான்–ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பிற்காக தேசிய நெடுஞ்சாலை துறையால் கைப்பற்றப்பட்டு வருகிறது.


இந்நிலப் பகுதியில் கிணறு, பம்பு செட், 4 போர்வெல், 140 தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் இருந்தன. ஆனால் இவற்றிற்கான உரிய இழப்பீடு வழங்காமல் துறை வஞ்சித்து வருவதாக விவசாயி குற்றஞ்சாட்டுகிறார். அதே பகுதியில் சிலருக்கு 80–90 லட்சம் வரை இழப்பீடு வழங்கிய நிலையில், தன்னுடைய கிணற்றிற்கு ரூ.1,10,000 மட்டுமே வழங்க முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த அவர், “உரிய இழப்பீடு வழங்கும் வரை நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டேன்” என தொடர்ந்து போராடி வந்தார்.


இந்த சூழ்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் டி.எஸ்.பி. ராஜசுந்தர் தலைமையில் அழகுவேலின் நிலத்தை கையகப்படுத்த வந்தனர். அப்போது தனது நியாயத்தை விளக்க முயன்ற விவசாயியை பொருட்படுத்தாமல், JCB எந்திரத்தின் மூலம் நேரடியாக நிலம் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


இதனால் மனஉளைச்சலில் ஆழ்ந்த அழகுவேல், உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவசரமாக செயல்பட்ட போலீசார் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவ, பொதுமக்கள் திரளாக கூடியதால், அதிகாரிகள் நிலம் பிடிக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு திரும்பினர். “உரிய இழப்பீடு வழங்குங்கள்; இல்லையெனில் நிச்சயமாக உயிரை மாய்த்துக்கொள்வேன்” என அழகுவேல் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


மேலும், மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றியிருந்த முகுந்தன் என்பவர், ஒரே மாதிரியான நிலங்களுக்கு சிலருக்கு உயர்ந்த இழப்பீடும், சிலருக்கு மிகக் குறைந்த தொகையும் வழங்கியதாக தொடர்ந்து விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதை தமிழக அரசு உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தீவிரமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies