தருமபுரி – டிசம்பர் 10
தருமபுரி தொடர்வண்டி நிலையத்தின் மேற்கு பகுதியைச் சுற்றியுள்ள தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சி, நெல்லிநகர் பகுதிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அணுகுமுகப் பாதையாக முக்கியமான 5 மீட்டர் அகல சாலை அமைக்க தொடர்வண்டி துறையால் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே 5 மீட்டர் பரப்பளவில் தற்போது தொடர்வண்டி துறை கட்டிடம் அமைக்கும் பணிகளை தொடங்கியதால், சாலை வசதி பாதிக்கப்படும் என்ற அச்சம் பொதுமக்களில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் நேரில் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேசினார். அனுமதி ஆணைப்படி சாலை வசதி உறுதியாகக் கடைபிடிக்கப்படும் என்றும், எந்த வித இடையூறும் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பொதுமக்களிடம் பேசிச் செம்மைப்படுத்தினார்.
மேலும், தொடர்வண்டி துறையால் வழங்கப்பட்ட அனுமதி ஆணைக்கிணங்க, மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலை வசதிக்கு எந்த குறையும் ஏற்படாத வகையில் உடனடி தலையீடு செய்ய வேண்டுமென, தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாகக் கடிதம் வழங்கியுள்ளேன் என MLA வெங்கடேஸ்வரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)