பென்னாகரம், டிசம்பர் 07 :
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மடம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சிறு தெருக்களில் வட்டார வளர்ச்சி துறை சார்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், காலப்போக்கில் இப்பகுதியைச் சேர்ந்த சிலர் சாலையை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அமைத்துள்ளனர். இதனால் தெருக்கள் மிகவும் குறுகலாகி, கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட அவசரநிலையிலுள்ளவர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்களும் அந்த தெருக்களில் செல்ல முடியாததால், பெரிய ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
சாலை ஆக்கிரமிப்பு பிரச்சினை குறித்து கிராம மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மடம் கிராமத்தின் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை வசதியை மீட்டுத் தந்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதை கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)