தருமபுரி – டிசம்பர் 08:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாளையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காக திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கான செயல்பாடுகள் குறித்து ஆட்சித்தலைவர் விளக்கமளித்தார்.
நம் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் படைவீரர்கள், அவர்கள் செய்துவரும் தியாகம் மற்றும் கடமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதியை படைவீரர் கொடி நாளாக அரசாங்கம் அனுசரித்து வருகின்றது. இந்த நாளில் திரட்டப்படும் நிதி முன்னாள் படைவீரர்கள், போர் வீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோரின் நலனுக்காக அரசு திட்டமிட்டு வழங்குகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான கொடிநாள் நிதி இலக்காக ரூ.1.45 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் இலக்கை மீறி ரூ.1.51 கோடி வசூல் செய்யப்பட்டு திரட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சித்தலைவர் பெருமிதம் தெரிவித்து, மாவட்ட நிர்வாகம் எப்போதும் முன்னாள் படைவீரர் நலனில் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்களின் குடும்ப நலனுக்காக ரூ.3.01 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் வட்டி மானியம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. தொடக்கமாக தேசிய மாணவர் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, மூவர்ணக் கொடியை ஆட்சித்தலைவர் ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)