பாலக்கோடு, டிச. 07 :
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த வாரம் ‘மணமகிழ் மன்றம்’ என்ற பெயரில் சூதாட்ட கிளப், பார் வசதி உட்பட புதிய தனியார் மதுபானக்கடை செயல்படத் தொடங்கியது. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், பாலக்கோட்டில் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் 12 தனியார் மதுபானக்கடைகள் மற்றும் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுக்கடைகள் திறக்கப்பட அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை கண்டித்தும், பாலக்கோட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை உடனடியாக மூட வலியுறுத்தியும், தமிழக வெற்றி கழகத்தினர் மதுபானக்கடையை முற்றுகையிட்டு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் நடைபெற்றது. பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குமார், பேரூர் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பேசியவர்கள், “ஆட்சிக்கு வரும் முன் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்ற வாக்குறுதியை ஸ்டாலின் அரசு முற்றிலும் மீறி, அரசு மதுபானக்கடைகளையே அதிகரித்து, இப்போது தனியார் மதுக்கடைகளையும் பெருகச் செய்கிறது. மக்களை ஏமாற்றி மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என்று கண்டனம் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் திடீரென மதுபானக்கடையை முற்றுகையிட்டதால், தவெக வினர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பின்னர் டி.எஸ்.பி. ராஜசுந்தர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது திருப்தி அளிக்காததால், மதுக்கடை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)