இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் டிசம்பர் 11, 2025 முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் நடைபெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
இந்த சரிபார்ப்பு பணிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பராமரிப்பு, சோதனை மற்றும் செயல் திறனை சரிபார்ப்பதற்கான பணிகளை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் பொறியியல் நிபுணர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த பணிகளை மேற்பார்வையிட இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லி மாநில கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் திரு. பல்ராம் மணா அவர்கள் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் டிசம்பர் 11 அன்று தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து செயல்முறைகளை ஆய்வு செய்வார்.
சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் அறைக்குள் எந்தவித மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்படாது. பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, செயல்பாட்டு நிலை ஆய்வு செய்யப்படும். இயங்கத் தகுதியான இயந்திரங்கள் மட்டும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படும். செயல்படாதவை தனியே பிரித்து BEL நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பப்படும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)