Type Here to Get Search Results !

மூடு விழா காணும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை; செயலற்ற நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் வாயில் முன்பு அமர்ந்து தர்ணா.


பாலக்கோடு, டிச. 17:

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இயங்கி வரும் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது நிர்வாக அலட்சியத்தால் மூடு விழா காணும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் அதிக சர்க்கரை உற்பத்தி திறன் கொண்ட சிறந்த ஆலை என்ற பெயரை பெற்றிருந்த இந்த ஆலை, ஒரு காலத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் கரும்பை தொடர்ந்து 9 மாதங்கள் அரவை செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


ஆனால், நாளடைவில் ஆலை நிர்வாகத்தின் செயல்திறன் குறைந்ததன் காரணமாக, தற்போது ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் கரும்பு கூட அரவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்கள் மட்டும் பெயரளவில் அரவை தொடங்கி, தொடங்கிய வேகத்திலேயே ஆலை மூடப்படுவதால், இந்த ஆலை மீது வாழ்வாதாரத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நிர்வாக அதிகாரிகள் விவசாயிகளிடமிருந்து தேவையான அளவு கரும்பை பதிவு செய்வதில்லை, விதை கரும்பு வழங்குவதில்லை, கொள்முதல் செய்யப்பட்ட கரும்பிற்கான தொகையை உரிய காலத்தில் வழங்குவதில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயிகள் விளைவித்த கரும்பை 10 மாதத்தில் அறுவடை செய்யாமல், பூ எடுத்துக் காய்ந்த பிறகே கொள்முதல் செய்வதால் எடை குறைந்து விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவதாகவும் தெரிவித்தனர். இதற்கு மேலாக, அடிக்கடி இயந்திர கோளாறுகள் ஏற்பட்டு அரவை நிறுத்தப்படுவதும், வெல்லப்பாகு வெளியேறி நட்டம் ஏற்படுவதும், நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.


வரும் 19-ஆம் தேதி அரவை பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அதிகாரிகள் கரும்பு இருப்பு 30 ஆயிரம் டன் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 1,800 டன் கரும்பு தேவைப்படும் நிலையில், இந்த அளவு கரும்பு இருந்தால் இரண்டு வாரங்கள் கூட ஆலை இயங்க முடியாது என்றும், முழுமையான கரும்பு இல்லாமல் அரவை தொடங்கினால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், பெயரளவில் அரவை தொடங்கி, பின்னர் அமைதியாக மூடிவிட்டு, கிடைக்கும் கரும்புகளை அரூர் சுப்ரமணிய சிவா சர்க்கரை ஆலைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.


இதனை அறிந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், “ஆலையை மூடாதே”, “செயலற்ற நிர்வாகமே பதவி விலகு” என கோஷமிட்டபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் இதனை அலட்சியப்படுத்தியதாக கூறி ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், சர்க்கரை ஆலை வாயில் முன்பு அமர்ந்து நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.


இந்த தர்ணா போராட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணியை சேர்ந்த மாநில துணை செயலாளர் திருப்பதி, தொ.மு.சா நிர்வாகிகள் மணி, முருகேசன், ஜம்புலிங்கம், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், கலையரசன், அம்பேத்கர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


@ தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies