தருமபுரி, டிச.17:
தருமபுரி மாவட்டத்தில் ஆதரவின்றி, ஏழ்மையில் உயிரிழக்கும் நபர்களின் புனித உடல்களை தங்கள் உறவாக கருதி நல்லடக்கம் செய்து வரும் மை தருமபுரி அமைப்பினர், சமூகவாழ்வில் மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அமைப்பு, தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆதரவற்ற நிலையில் உயிரிழக்கும் முதியவர்கள் மற்றும் ஏழ்மை நிலையில் மரணமடைவோரின் புனித உடல்களை இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், தருமபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவின்றி உயிரிழந்த மூன்று முதியவர்களின் புனித உடல்களையும், பாலக்கோடு பகுதியில் சாலையோரத்தில் சுற்றித் திரிந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த ஒரு முதியவரின் புனித உடலையும் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் பச்சையம்மன் கோயில் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
இந்த மனிதநேய பணியில் தருமபுரி நகர காவல் நிலைய காவலர் பாக்கியராஜ், பாலக்கோடு காவல் நிலைய காவலர் பெருமாள், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் கிருஷ்ணன், தன்னார்வலர்கள் அருண் பிரசாத், கணேஷ் குமார், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை 180-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உயிரிழந்தவர்களின் புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதரவற்றோருக்கு உறவாக நின்று இறுதி மரியாதை அளிக்கும் இந்த அமைப்பின் சேவை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

.jpg)