தருமபுரி – டிசம்பர் 31
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில்-ல் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழா நேற்று வழக்கமான உற்சாகம் மற்றும் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை இத்திருவிழா நடைபெறுவது மரபாக இருந்து வருகிறது.
இதையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து விழாக் குழு சார்பில் ஆடுகள், கோழிகள் பலியிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
மார்கழி மாதம் முதல் நாள் முதலே விரதம் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று இருமுடி கட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும், பலர் அழகுக்குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது.
இந்த திருவிழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுடன், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு முனியப்பனை வழிபட்டனர். விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், பாதுகாப்பு பணிக்காக போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பி.அக்ரஹாரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் மகாவிஷ்ணு, செயல் அலுவலர் கீதாஞ்சலி, விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

.jpg)