தருமபுரி, டிச.30 :
தருமபுரியில் வீச்சரிவாளுடன் உணவகத்திற்குள் நுழைந்து வடமாநில இளைஞர்களை மிரட்டியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலி தொடர்பாக, தருமபுரி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, சவுளுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (43) என்பவர், பழைய கோட்டர்ஸ் பகுதியில் “ரூபேஸ் பாஸ்ட் புட்” என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.
உணவகத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் அருகிலுள்ள வீட்டின் முன்பு தேங்கி துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த அம்மாசி என்பவருக்கும், உணவக உரிமையாளர் சரவணன் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பின்னர் அடிதடி தகராறாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகார்களின் பேரில், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், உணவகத்தில் பணிபுரியும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபருடன் நேரடி பிரச்சினை எதுவும் இல்லை என்றும், வடமாநிலத்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியிடப்படும் செய்திகள் தவறானவை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
புலன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சட்டம்–ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், தவறான கோணத்தில் செய்திகளையும் கருத்துகளையும் சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

.jpg)