பாப்பாரப்பட்டி, டிச. 23:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்று வருவதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து, சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற கவுன்சிலர்களை போலீசாரை வைத்து மிரட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 6-வது வார்டு கவுன்சிலர் ஹாஜிரபி மற்றும் 13-வது வார்டு கவுன்சிலர் ஜபியுல்லா ஆகியோர், தற்போதைய திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜ் மற்றும் செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் கூட்டுச் சேர்ந்து, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாமல், அரசுத் திட்டங்களை செயல்படுத்தியதாகக் காட்டி பல கோடி ரூபாய் அரசு நிதியை கொள்ளையடித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆளே இல்லாத வீடுகளின் முகவரியை பயன்படுத்தி பல்வேறு திட்டங்களுக்கு போலியான பில்கள் தயாரித்து நிதி செலவிட்டதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக இதே முறையில் பல கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கவுன்சிலர் கூட்டங்களில் தங்களை பேச விடாமல் தடுக்கப்படுவதாகவும், கேள்வி எழுப்பினால் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரின் பதவிகளை பறிக்கக் கோரி, இன்று பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த கவுன்சிலர்கள், போலீசாரை ஏவி போராட்டம் நடத்தக் கூடாது என மிரட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதனால், திட்டமிட்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வரும் 30-ஆம் தேதி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்துக்களையும் ஒருங்கிணைத்து, நீதிமன்ற உத்தரவுடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கவுன்சிலர்கள் அறிவித்துள்ளனர். அதே சமயம், பேரூராட்சி தலைவரின் ஊழல் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இந்த சம்பவம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில் கடும் அரசியல் மற்றும் நிர்வாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpg)