பென்னாகரம், டிச. 23:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகமரை ஊராட்சி ஏமனூர் கிராமத்தில், வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கு உரிய பட்டா வழங்கக் கோரி, கிராம மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை அறிவித்து, திருவோடு ஏந்தி வனப்பகுதியில் குடியேறும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏமனூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேட்டூர் அணை கட்டுமான காலத்தில் இடம்பெயர்ந்த மக்களை, அரசு இப்பகுதியில் நிலம் வழங்கி குடியேற்றியதாக கூறப்படுகிறது. கடந்த 91 ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் மக்கள், தங்களது வீடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக 1997 ஆம் ஆண்டு சுமார் 450 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த பட்டாவின் அடிப்படையில், குடிநீர், மின்சாரம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இப்பகுதிக்கு வழங்கப்பட்டன. மேலும், நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் 2017 ஆம் ஆண்டு நெருப்பூர்–ஏமனூர் இடையே 12 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சமீப காலமாக அரசு திட்டங்கள் எதுவும் ஏமனூர் கிராமத்திற்கு வருவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, முன்னர் வழங்கப்பட்ட பட்டாக்கள் போலியானவை, தற்போது மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சட்டப்படி பட்டா இல்லை என்பதால், வீட்டு மனை, இலவச வீடுகள், சிமெண்ட் சாலை உள்ளிட்ட அரசுத் திட்டங்களை செயல்படுத்த இயலாது என அதிகாரிகள் தெரிவித்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதனை கடுமையாக கண்டித்து, சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஏமனூர் கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திருவோடு ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தின் போது, மத்திய மற்றும் மாநில அரசுகளையும், அரசு அதிகாரிகளையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஊர்வலம் முடிவில், கிராம மக்கள் வனப்பகுதியில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 2026 சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிப்போம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அரசுத் தரப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

.jpg)