தருமபுரி, டிச. 23:
தருமபுரி அரசு மருத்துவமனை அருகே, கடந்த 10 நாட்களாக சாலையோரத்தில் ஆதரவின்றி இருந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க பாட்டியை, மை தருமபுரி அமைப்பினர் மனிதநேயத்துடன் மீட்டு, பாதுகாப்பாக காப்பகத்தில் சேர்த்தனர். சாலையோரத்தில் வயதான நிலையில் இருந்த பாட்டியிடம் விசாரித்தபோது, அவரது பெயர், முகவரி உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியவில்லை. இதையடுத்து, தருமபுரி மீட்பு அறக்கட்டளை சேர்ந்த பாலசந்திரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா மற்றும் குழுவினர்கள் இணைந்து, பாட்டியை மீட்டு சுத்தம் செய்து, அரூர் பகுதியில் உள்ள லிட்டில் டிராப்ஸ் முதியோர் இல்லம்-இல் பாதுகாப்பாக சேர்த்தனர்.
இந்த நிகழ்வின் போது, பல குடும்பங்கள் தங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களை பராமரிக்காமல் சாலையோரங்களில் விட்டுச் செல்வது வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். அரசின் முறையான அனுமதியுடன், இவ்வாறான முதியவர்களை பாதுகாப்பான காப்பகங்களில் சேர்த்தால், அவர்களின் இறுதி காலம் நிம்மதியாகவும் மரியாதையுடனும் அமையும் என மை தருமபுரி அமைப்பினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த மனிதநேய செயல், தருமபுரி பகுதியில் சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாக பாராட்டைப் பெற்றுள்ளது.

.jpg)