Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி பேருந்து நிலைய கடை குத்தகை முறைகேடு; தீர்மானத்திற்கு எதிர்ப்பு – மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த மார்க்சிஸ்ட் கவுன்சிலர் கைது.


பாப்பாரப்பட்டி – டிசம்பர் 26

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடை குத்தகை உரிமத்தை விதிமுறைகளை மீறி நீட்டிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மெயின் ரோட்டை ஒட்டி அமைந்துள்ள 40 அடி நீளம், 15 அடி அகலம் கொண்ட காலியிடம் ஆவின் கடை நடத்துவதற்காக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குனருக்கு ஓராண்டு குத்தகைக்கு விடப்பட்டது. பின்னர் அந்த குத்தகை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதே பேருந்து நிலையத்தில் 10×10 அடி பரப்பளவு கொண்ட 100 சதுர அடி கடைகள் மாதம் ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை வாடகையில் ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், பிரதான முகப்பில் மெயின் ரோட்டையொட்டி உள்ள சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட கடை வெறும் ரூ.3,000 மாத வாடகைக்கு மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த குத்தகை காலம் 2022 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், பேரூராட்சி விதிமுறைகளின்படி காலியிடங்களுக்கு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் குறைந்தபட்சம் 3 சதவீத வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும். அதன்படி, சதுர அடிக்கு ரூ.1,000 என கணக்கிட்டால், குறைந்தபட்சம் மாதம் ரூ.18,000 வாடகை வசூலிக்கப்பட வேண்டும் என பேரூராட்சி நிர்வாகமே தெரிவித்திருந்தது.


இந்நிலையில், குத்தகை காலம் முடிந்த பிறகும் உரிமத்தை நீட்டிக்கக் கோரி குத்தகைதாரர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, பொது ஏலம் மூலம் குத்தகை உரிமம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவையும் பேரூராட்சி சட்ட விதிகளையும் புறக்கணித்து, பொது ஏலம் நடத்தாமல் மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்கு குத்தகையை நீட்டிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது.


இந்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாப்பாரப்பட்டி பேரூராட்சி 8-ஆவது வார்டு கவுன்சிலர் வே. விசுவநாதன், இது சட்டவிரோதம் எனக் கூறி மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து, பேரூராட்சி அலுவலக வாயிலில் குத்தகை நீட்டிப்பை கண்டித்து, கட்சிக்கொடியுடன் வாசகங்கள் அடங்கிய பதாகையை அணிந்து தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, பாப்பாரப்பட்டி காவல் துறையினர் கவுன்சிலர் விசுவநாதனை கைது செய்தனர். இந்த சம்பவம் பாப்பாரப்பட்டி பகுதியில் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies