பாலக்கோடு, டிச. 26:
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி தலைமையில் பாலக்கோடு கடைவீதியில் செயல்பட்டு வரும் உணவகங்கள், துரித உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, மூன்று உணவகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த நெகிழி கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிமுறைகளை மீறிய மூன்று உணவகங்களுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் வணிகம் செய்து வந்த சில கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. உணவகங்களில் எந்த சூழலிலும் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும், உணவு பரிமாற வாழை இலை அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
அதேபோல், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும், இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இத்தகைய திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

.jpg)