தருமபுரி மாவட்டம் அருகே, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி – ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து புலிக்கரை, சோமனஅள்ளி, பாலக்கோடு, வெள்ளிசந்தை, சூடப்பட்டி, பிக்கனஅள்ளி, மல்லுப்பட்டி வழியாகச் சென்று மீண்டும் தருமபுரி – ஓசூர் வரை இயக்கப்பட வேண்டிய தனியார் பேருந்துகள், சமீப காலமாக ஊருக்குள் வராமல் அதியமான்கோட்டை – ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைவதுடன், உரிய நேரத்தில் தங்கள் பணியிடங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும்கூட பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை தருமபுரியில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற தனியார் ராஜம் பேருந்து, சூடப்பட்டி, பிக்கனஅள்ளி, மல்லுப்பட்டி வழியாகச் செல்லாமல், வெள்ளிசந்தையிலிருந்து கொலசனஅள்ளி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வெள்ளிசந்தை நான்கு வழிச்சாலை அருகே பேருந்தை சிறைபிடித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேருந்தை இயக்க வேண்டும் என கடுமையாக எச்சரித்தனர். இதையடுத்து, அந்த பேருந்து மீண்டும் சூடப்பட்டி, பிக்கனஅள்ளி, மல்லுப்பட்டி வழியாக இயக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால், பாலக்கோடு – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், புகார் அளித்தாலும் வட்டார போக்குவரத்து அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மீறி இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மீது போக்குவரத்து துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


