Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சி கடைவீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகள் அகற்ற பாஜக சார்பில் கோரிக்கை.


பாலக்கோடு | ஜனவரி 31:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில், போக்குவரத்திற்கு கடும் இடையூறாக உள்ள கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து, பாஜக நிர்வாகியும் சமூக ஆர்வலருமான பி.கே.சிவா, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.


பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு தினசரி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் கோயம்புத்தூர், சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. மேலும் மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, சோமனஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாலக்கோடு நகருக்குள் வந்து செல்கின்றனர்.


இந்த நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், எம்.ஜி.ரோடு, கடைவீதி, தக்காளி மண்டி முதல் காவல் நிலையம் வரையிலான பகுதியில், சாலையின் இருபுறமும் பேரூராட்சி இடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், காய்கறி கடைகள், தள்ளுவண்டி வியாபாரங்கள், இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


இதன் காரணமாக, அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உருவாகி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து பந்தல் அமைத்து விற்பனை செய்வதால், போக்குவரத்து மேலும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சில கடைக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


வரும் நாட்களில் பொங்கல், கோயில் விழாக்கள் உள்ளிட்ட பண்டிகைகள் நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்த பி.கே.சிவா, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.


உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies