தருமபுரி | டிசம்பர் 30:
புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பேக்கரிகளில் விதவிதமான கேக்குகளை ஆர்டர் செய்து கொண்டாட தயாராகி வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பேக்கரி மற்றும் கேக் தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ், கேக் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனை கூடங்களில் சுகாதாரம், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம், சேர்க்கப்படும் கலர் மற்றும் ரசாயனங்களின் அளவு, அச்சிடப்பட்ட காகிதங்கள் பயன்பாடு, நெகிழி தவிர்ப்பு உள்ளிட்ட அம்சங்களை கண்காணித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில், நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், தருமபுரி நகரில் நேதாஜி பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு பேக்கரிகள் மற்றும் கேக் தயாரிப்பு கூடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், ப்ளூபெர்ரி, ஐஸ் கேக், வெண்ணிலா, பிளம் கேக், பிளைன் கேக் உள்ளிட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான கேக் வகைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மைதா, வெண்ணெய், வனஸ்பதி, க்ரீம், பழங்கள், பழரசங்கள், செர்ரி, பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, நட்ஸ் உள்ளிட்ட மூலப்பொருட்களின் தரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும்,
-
அனுமதிக்கப்பட்ட அளவை மீறி ரசாயன கலர்கள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்,
-
கேக்குகளை அடுக்கி வைக்கும் போது அல்லது பரிமாறும் போது அச்சிடப்பட்ட காகிதங்களை பயன்படுத்தக் கூடாது,
-
பயன்படுத்தப்படும் பட்டர் பேப்பர்கள் தரமானதாகவும், கேக்கில் ஒட்டாத வகையிலும் இருக்க வேண்டும்,
-
பணியாளர்கள் தனிப்பட்ட சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை கட்டாயமாக பராமரிக்க வேண்டும்
என பேக்கரி உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் உணவு பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆய்வின் போது, அச்சிடப்பட்ட காகிதங்களை பயன்படுத்திய ஒரு பேக்கரியும், சுகாதார குறைபாடு கண்டறியப்பட்ட மற்றொரு பேக்கரியும் என இரண்டு பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டு, குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், கேக் அலங்காரங்களில் பயன்படுத்தப்படும் வண்ண உருண்டை மிட்டாய்கள் பகுப்பாய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டன.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் இதேபோன்ற ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தெரிவித்தார்.

.jpg)
.jpg)