தருமபுரி | டிசம்பர் 29:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் நேற்று (28.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பாலக்கோடு அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் பகுதி, நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் இடம், மருந்தகம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தார். குறிப்பாக, நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் மேற்கொள்ளப்படும் பதிவுகள், பணிநடைமுறை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால சிகிச்சை பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, மயக்கவியல் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, விஷ முறிவு சிகிச்சை பிரிவு மற்றும் அதற்கான மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளின் தரம், மருந்துகள் கிடைப்புத் தன்மை மற்றும் அவசர கால சேவைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
மேலும், புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனையின் தூய்மை நிலை, குடிநீர், மின்சாரம், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தும் முறையாக வழங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மருத்துவமனை வளாகம் முழுவதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், நோயாளிகளிடம் மனிதநேயத்துடன் அணுகி சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (மருத்துவம்) மரு. சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் திரு. அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.

.jpg)