தருமபுரி | டிசம்பர் 29
தருமபுரி மாவட்டம், இண்டூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 8-ஆம் சுற்று கோமாரி நோய் (FMD) தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (29.12.2025) துவக்கி வைத்தார். கோமாரி நோய் என்பது இரட்டைக் குளம்பு கொண்ட மாடுகள் மற்றும் எருமைகளை தாக்கும் நச்சுயிரி தொற்று நோயாகும். இந்நோயால் காய்ச்சல், வாயில் மற்றும் குளம்புகளில் கொப்புளங்கள் உருவாகி, மாடுகளில் சினைபிடிக்காமல் போதல், பால் உற்பத்தி குறைதல், எருதுகளின் வேலைதிறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் உயிரிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கால்நடை வளர்ப்போருக்கு பெரும் பொருளாதார இழப்பு நேரிடுகிறது. சுகாதாரமற்ற பண்ணை பராமரிப்பு, பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உமிழ்நீர், சிறுநீர் மற்றும் பண்ணை கழிவுகள் மூலம் இந்த நோய் எளிதில் பரவுகிறது.
இந்த கொடிய நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் (NADCP) கீழ், 5 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாடுகள் மற்றும் எருமைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தருமபுரி மாவட்டத்தில் 345,500 கறவை மாடுகள் மற்றும் எருமைகளுக்கு, 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் 29.12.2025 முதல் 18.01.2026 வரை 21 நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு 3,52,050 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாகவும், 82 கால்நடை உதவி மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, குக்கிராமங்கள் மற்றும் மலை கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஸ்வரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு. அமரியசுந்தர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம் பெ. சுப்பிரமணி, துணை இயக்குநர் மரு. அ. அருள்ராஜ், ஆவின் பொது மேலாளர் திருமதி மாலதி, உதவி இயக்குநர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கால்நடை வளர்ப்போர் அனைவரும் தங்களுடைய மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்தி, கோமாரி நோயிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

.jpg)