தருமபுரி, டிச.14:
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய கலாச்சார வளநிலைப் பயிற்சி மையம் (சி.சி.ஆர்.டி), நியூடெல்லி, பள்ளிக் கல்வியில் இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரம், கலைகள், மதிப்புகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்திய பண்பாட்டு மரபுகளை பாடத்திட்டத்தில் இணைக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள், பணிமனைகள் மற்றும் கலாச்சார செயல்பாடுகளை சி.சி.ஆர்.டி தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பெரியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர் அ. ஷர்மிளா பேகம், சி.சி.ஆர்.டி அமைப்பால் மாவட்ட வள நபராக (District Resource Person – DRP) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் மாஸ்டர் டிரெய்னராகவும், தேசிய கலாச்சார தூதராகவும் செயல்பட உள்ளார்.
இதற்காக 2025 நவம்பர் 21 முதல் 23 வரை உதயபூர் பிராந்திய மையத்தில் நடைபெற்ற “பாடத்திட்டத்தில் கலாச்சார உள்ளீடுகள்” என்ற மூன்று நாள் தேசிய பயிற்சி பட்டறையில் அவர் கலந்து கொண்டார். இப்பயிற்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 85 ஆசிரியர்கள் பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டிலிருந்து 10 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியை துணை இயக்குநர் (மதிப்பீடு) டாக்டர் ராகுல் குமார் வழங்கினார். பயிற்சி ஒருங்கிணைப்பை ஒருங்கிணைப்பாளர் மிதுன் தத்தா மேற்கொண்டார். பயிற்சி நிறைவில், துணை இயக்குநர் டாக்டர் ராகுல் குமார் அவர்கள், டிஆர்பி. அ. ஷர்மிளா பேகத்திற்கு பங்கேற்புச் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் கலாச்சாரக் கல்வி பயிற்சிகள் நடத்துதல், பாடத்திட்டத்தில் கலாச்சார ஒருங்கிணைப்பை முன்னெடுத்துச் செல்லுதல், பள்ளிகளில் இந்திய மற்றும் உள்ளூர் பண்பாட்டை பரப்புதல் ஆகிய பணிகளில் அவர் முக்கிய பங்காற்ற உள்ளார். மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கலாச்சாரத்தை பேணிப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)