Type Here to Get Search Results !

தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: ரூ.10 லட்சம் கட்டப்பஞ்சாயத்து – “இதுவா திமுகவின் நீதி?” என பாமக கேள்வி.


நல்லம்பள்ளி, டிச.16:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் மணிவண்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தை வெளியில் தெரியாமல் மூடி மறைக்க ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அந்த பள்ளியில் விளையாட்டுப் பாடவேளைக்கு மாணவிகளை சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திடலுக்கு அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல், ஊர் முக்கியப் பிரமுகர்களிடம் பேசி பிரச்சினையை முடிக்க முயற்சி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி முன்னாள் மற்றும் தற்போதைய பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு துணை நடிகரின் வீட்டில் கூடி கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்குவதற்காக ஆசிரியர் மணிவண்ணனிடம் ரூ.10 லட்சம் பெறப்பட்டு, அதில் ரூ.6 லட்சம் மட்டும் மாணவியின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகை பஞ்சாயத்து செய்தவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட ஒருவரே பொதுவெளியில் தெரிவித்ததைத் தொடர்ந்து தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும், தந்தை இல்லாத நிலையில் தாயும் இந்த விவகாரத்தில் அலைந்தபோது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் பயன்படுத்திக் கொண்டு, குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் மணிவண்ணன், இதற்கு முன்பும் வேறு பள்ளிகளில் இதே போன்ற புகார்களுக்கு உள்ளாகி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.


ஆசிரியர்கள் தாய்-தந்தைக்கு அடுத்த நிலையில் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை நம்பியே பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். அத்தகைய நம்பிக்கையை தகர்த்து, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்காமல், பணம் கொடுத்து பிரச்சினையை மூடி மறைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது, திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் அநீதி மற்றும் குற்றவாளிகளை காப்பாற்றும் போக்கு எந்த அளவுக்கு புரையோடிப்போயுள்ளது என்பதை காட்டுகிறது என பாமக குற்றம் சாட்டியுள்ளது.


எனவே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மணிவண்ணனை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரின் குற்றத்தை மூடி மறைக்க முயன்ற கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களும், அதற்கு துணை நின்ற பள்ளி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி பெற்றுத் தர பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


@ தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies