தருமபுரி | டிசம்பர் 19:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 11 வயது மகன் விஷால், கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் இருந்த சிறுவன் விஷாலுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக மை தருமபுரி அமைப்பினர் தேவையான மனிதநேய உதவிகளை தொடர்ந்து செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது புனித உடலை மை தருமபுரி அமைப்பினர் தங்களது பொறுப்பில் எடுத்துக்கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
இந்த நல்லடக்க நிகழ்வில் மை தருமபுரி செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், தருமபுரி அரசு மருத்துவமனை செவிலியர் கௌசல்யா, தன்னார்வலர் கார்த்திக், சிவன் திருவடி சேவை குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறுவனின் புனித உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில் ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியை மை தருமபுரி அமரர் சேவை அமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வமைப்பின் மூலம் இதுவரை 181 ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உயிரிழந்தவர்களின் புனித உடல்கள் மனிதநேயத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)