தருமபுரி, டிச.19:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 பணிகளின் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12,03,917 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
057-பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 312 வாக்குச்சாவடிகளில் 1,16,722 ஆண்கள், 1,14,057 பெண்கள் மற்றும் 18 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,30,797 வாக்காளர்கள் உள்ளனர். 058-பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளில் 1,23,658 ஆண்கள், 1,15,827 பெண்கள் மற்றும் 7 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,39,492 வாக்காளர்கள் உள்ளனர். 059-தருமபுரி சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளில் 1,25,364 ஆண்கள், 1,23,361 பெண்கள் மற்றும் 77 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,48,802 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
060-பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடிகளில் 1,24,314 ஆண்கள், 1,23,249 பெண்கள் மற்றும் 14 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,47,577 வாக்காளர்கள் உள்ளனர். 061-அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடிகளில் 1,18,670 ஆண்கள், 1,18,669 பெண்கள் மற்றும் 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,37,249 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவ்வாறு தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,596 வாக்குச்சாவடிகளில் 6,08,828 ஆண்கள், 5,95,153 பெண்கள் மற்றும் 136 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12,03,917 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த திருத்தப் பணிகளில் மொத்தமாக 6.34 சதவீத வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
19.12.2025 முதல் 18.01.2026 வரை முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படும் எனவும், அவற்றின் மீது வாக்காளர் பதிவு அலுவலர்கள் உரிய விதிமுறைகளின்படி விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளுவார்கள் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். தற்போது 18 வயது நிறைவடைந்தவர்களும், 01.04.2026க்குள் 18 வயது நிறைவடைய உள்ளவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள தகுதியான நபர்களும் புதிய வாக்காளர் பதிவு படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவத்தை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்காக வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவுகள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையங்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் படிவங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் “New Voters Registration” என்ற பகுதியில் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1950, வாட்ஸ்அப் தேர்தல் உதவி எண் 94441 23456 மற்றும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
வலுவான ஜனநாயக கட்டமைப்பிற்கும், செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பிற்கும் வாக்களிப்பது நமது கடமை என்பதால், தகுதியான அனைவரும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள், தேர்தல் வட்டாட்சியர் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் அனைத்து தேசிய, மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)