கடத்தூர், டிச. 23:
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ரெ.சதீஸ், மாவட்ட ஆட்சித்தலைவர், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒசஅள்ளி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) கீழ் ரூ.6.69 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அகலப்படுத்தும் பணிகளையும், அதே ஊராட்சியில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கேபியான் தடுப்பணை பணிகளையும் ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
மேலும், மடதஹள்ளி ஊராட்சியில் நபார்டு (NABARD) திட்டத்தின் கீழ் ரூ.435.97 இலட்சம் மதிப்பீட்டில் மடதஹள்ளி முதல் பசுவபுரம் வரை நடைபெற்று வரும் சாலை மேம்படுத்துதல் பணிகளையும், தாளநத்தம் ஊராட்சியில் ரூ.5.62 இலட்சம் மதிப்பீட்டில் ரெட்டி ஏரி புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். மொத்தமாக ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இத்திட்டங்களின் பணித் தரம், காலக்கெடு மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் ஆட்சித்தலைவர் விரிவாக கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திட்டங்களின் முன்னேற்றம், செலவின விவரங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது, கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. சுருளிநாதன், திரு. செல்வன், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

.jpg)