தருமபுரி – டிசம்பர் 19:
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசின் புதிய சட்ட மாற்ற முயற்சியை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஏரி வேலை தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான பிரதாபன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை மாற்றி, “வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டம் (கிராமப்புறம்)” என்ற பெயரில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், பல ஆண்டுகளாக கிராமப்புற ஏழை மற்றும் ஏரி வேலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வரும் பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தையே தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான ஏரி வேலை தொழிலாளர்கள் கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் சட்ட மாற்ற முயற்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)