தருமபுரி | டிசம்பர் 30 :
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 பணிகள் தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறிஞ்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டம், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் குல்தீப் நாராயண், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சிறப்பாக பங்களித்ததற்காக பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் 18.01.2026 வரை வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகளை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபடாமலும், தகுதியற்ற நபர்களின் பெயர்கள் இடம்பெறாமலும், துல்லியமான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் எனவும், அதற்கேற்ப அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் குல்தீப் நாராயண் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்காளர் பட்டியல் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான சிறப்பு முகாமையும், தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதிகோன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 பணிகளையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, அளூர் வருவாய் கோட்டாட்சியர் திரு செம்மலை, நகராட்சி ஆணையர் திரு சேகர், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

.jpg)