தருமபுரி | டிசம்பர் 31
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறிஞ்சி கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் செயலாக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, கல்வித் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய கல்வி முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், நடப்பாண்டில் நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வில், தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 100 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள தகவல் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, இத்தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
மேலும், மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், மன்ற செயல்பாடுகளில் சிறப்பாக செயலாற்றிய மாணவிகள் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது. அதேபோல், கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கினார்.
இந்த செயலாக்கக் கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா உள்ளிட்ட கல்வித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

.jpg)