தருமபுரி, டிச.24:
தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில், தகடூர் புத்தகப் பேரவையின் 500-வது நூல் அறிமுக நிகழ்ச்சி இன்று (24.12.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘அறி(வு)முகம்’ என்ற நூலை திரு. ரெ. சதீஸ், மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் ஆர். பாலகிருஷ்ணன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், இ.ஆ.ப. (ஓய்வு) ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
நூல் அறிமுக நிகழ்ச்சிகள், புதிய படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதும், படைப்பாளி–வாசகர் இடையே உரையாடலை உருவாக்குவதும், படைப்பின் சிறப்புகளை விமர்சனங்கள் மூலம் வெளிப்படுத்துவதும் முக்கிய நோக்கங்களாக உள்ளன என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். கல்லூரி மாணவ, மாணவியர்கள் அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள புத்தக வாசிப்பு பழக்கம் அவசியம் என வலியுறுத்தினார். தொடர்ந்து புத்தகங்களை வாசிப்பதன் மூலம் சிறந்த அறிவைப் பெற்று உயர்ந்த வளர்ச்சியை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.
மாணவப் பருவம் ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்த வேண்டிய முக்கியமான காலகட்டம் என்றும், அதற்கு கல்வி மட்டுமே சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்தார். இன்றைய தலைமுறையினர் புத்தக வாசிப்பை வழக்கமாக்கி, கல்வி கற்று, பல்வேறு துறைகளில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஒரு புத்தகத்தை வாசித்த பின் தொடர்ந்து மேலும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாகும்; எனவே அனைவரும் புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், அறிவியல், வரலாறு, இலக்கியம், இலக்கணம், அறம் சார்ந்த நூல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளதாகவும், குறிப்பாக தமிழ் நன்னெறி மற்றும் இலக்கிய நூல்களை அதிகளவில் வாசிப்பதன் மூலம் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். நல்ல புத்தகங்கள் நல் ஆளுமையை உருவாக்கும்; சிறந்த புத்தகங்கள் சிறப்பான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தகடூர் புத்தகப் பேரவை தலைவர் திரு. இரா. சிசுபாலன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் திரு. கோ. சுந்தர், தருமபுரி கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் திருமதி. என். இராமலட்சுமி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் திரு. கோ. கண்ணன், தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு. இரா. செந்தில், ஒருங்கிணைப்பாளர் திரு. இ. தங்கமணி, பொருளாளர் திரு. எம். கார்த்திகேயன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

.jpg)