தருமபுரி | டிசம்பர் 27:
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான கைப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் இன்று கோலாகலமாக துவங்கின. மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளை நிர்மல் குமார் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த கைப்பந்து போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆண்கள் 38 அணிகளும், பெண்கள் 38 அணிகளும் என மொத்தம் 76 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த கைப்பந்து போட்டிகளில் வெற்றி பெறும் ஆண்கள் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.40,000, மூன்றாம் பரிசாக ரூ.30,000, நான்காம் பரிசாக ரூ.20,000 மற்றும் ஐந்தாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளது. பெண்கள் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ.15,000 மற்றும் நான்காம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளது.
இந்த தொடக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், நகர நிர்வாகிகள் கௌதம், நாட்டான் மாது, அதிமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் அசோகன், நகரச் செயலாளர் பூக்கடை ரவி மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாநில அளவிலான கால்பந்து போட்டிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி துவக்கி வைத்தார். இந்த கால்பந்து போட்டிகளும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.60,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.40,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கால்பந்து போட்டியில் சென்னை, தருமபுரி, சேலம், நாமக்கல், மதுரை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40 அணிகள் பங்கேற்றுள்ளன. மேலும், பெங்களூரு, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் கால்பந்து அணிகள் கலந்து கொண்டு போட்டியை மேலும் சிறப்பித்தன.
கால்பந்து போட்டி தொடக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், தருமபுரி திமுக நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் அசோகன், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், எஸ்.ஐ. சூரிய நாராயணன், தருமபுரி மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஆனந்த், துணைத் தலைவர் அசோக்குமார், ஒருங்கிணைப்பாளர் தனசேகர், செயலாளர் கணேசன், துணைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் குமரேசன் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான கால்பந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் விளையாட்டு ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக விளையாட்டு ரசிகர்கள் தெரிவித்தனர்.

.jpg)
.jpg)