தருமபுரி | டிச. 31:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGS) பெயர் மாற்றம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, புதிய சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தர்மன் முன்னிலை வகித்தார். ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுருளிநாதன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றினர்.
இறுதியாக, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இளங்குமரன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். இதில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாவட்ட பொருளாளர் வினோத் குமார் நன்றி உரையாற்றினார்.

.jpg)