தருமபுரி, டிச. 05:
தருமபுரி மாவட்ட பொக்சோ (POCSO) சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர் கல்பனா, லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
போக்சோ வழக்கின் பின்னணி
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் கிராமத்தை சேர்ந்த வீரய்யனின் மகன் செந்தில் என்பவரின் மகளுக்கு (பெயர் வெளியிடப்படவில்லை – POCSO சட்ட விதிகளின்படி), 2022-ஆம் ஆண்டு அந்த கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பொம்மிடி காவல் நிலையத்தில் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தற்போது தருமபுரி POCSO சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
லஞ்சக் கோரிக்கை குற்றச்சாட்டு
பாதிக்கப்பட்ட சிறுமிக்காக அரசு தரப்பில் வழக்கை முன்னிலைப்படுத்தும் Assistant Public Prosecutor (POCSO Special Court), கல்பனா, சிறுமியின் தந்தை செந்தில் அவர்களிடம் வழக்கை சீராக நடத்துவதற்காக ₹25,000 லஞ்சம் கோரினார், நேரிலும், தொலைபேசியிலும் பலமுறை அழுத்தம் தந்தார். இதனால் அவதிப்பட்ட செந்திலிடம் இதுவரை ₹10,000 லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது, மேலும் ₹15,000 கோரி தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் வலைவீச்சு
மனமுடைந்த செந்தில், தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். DSP நாகராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான குழுவினர் ரகசிய நடவடிக்கை மேற்கொண்டனர். பொறுப்பாளர்களின் தகவலின்படி, செந்தில் வழங்கிய ₹10,000 லஞ்சத்தை பெற்று கொண்ட அதே நேரத்தில் அரசு வழக்கறிஞர் கல்பனா கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்த விசாரணை நடைபெறுகிறது
லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கின் அனைத்து விவரங்களையும் சேகரித்து,
அரசு ஊழியர்கள் மீதான சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

