தருமபுரி, டிசம்பர் 23:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட்டுனஅள்ளி கிராம பஞ்சாயத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து, தருமபுரி மாவட்ட மனித உரிமைகள் கழகம் அரசியல் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சேஅள்ளி, வட்டுனஅள்ளி கிராம பஞ்சாயங்களில் பணிபுரியும் செயலாளர்கள் மேற்கொண்டதாக கூறப்படும் முறைகேடுகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைகள் கழக மாநில துணைத் தலைவர் (கிருஷ்ணகிரி மண்டலம்) பெரியசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகம், சேலம் மண்டல நிர்வாகிகள் கோவிந்தராஜ், பார்த்திபன், நாமக்கல் மண்டலம் விக்கி உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகளுக்கு உடனடி விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

.jpg)