தருமபுரி, டிசம்பர் 20:
தருமபுரி அரசு மருத்துவமனை அருகில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவிலியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செவிலியர் ரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல் அனைத்து தொகுப்பூதிய (MRB) செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு, “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
மேலும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை–3 பணியிடங்களை மீண்டும் உருவாக்குதல், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்குதல், பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு உரிய ஊதிய உயர்வு வழங்குதல் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. செவிலியர்களுக்கு 7, 14, 20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும்; அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்; எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18,000 ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தரத் தன்மையுடைய செவிலியர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

.jpg)