பாலக்கோடு, டிச.19:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திம்மனஅள்ளியில் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2025–26ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கான பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.12.2025) தொடங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு அரவைப் பணியை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், நடப்பு 2025–26ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மொத்தம் 52,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக 2,200 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆலையில் இயங்கி வரும் 12 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையம் மூலம் இதுவரை 3,84,23,430 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 1,20,53,990 யூனிட் ஆலை பயன்பாட்டிற்கும், மீதமுள்ள 1,95,49,200 யூனிட் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விளக்கினார். மேலும், நடப்பு 2025–26 நடவுப் பருவத்தில், 2026–27ஆம் ஆண்டு அரவைக்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் (NADP) மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் (KAVIADP) ஆகியவற்றின் கீழ் பருநாற்று மற்றும் ஒருபரு கரணை நடவுக்கான மானியத் தொகைகள் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுவதாகவும் கூறினார். 2025–26 அரவைப் பருவத்தில் சப்ளை செய்யப்படும் கரும்பிற்கு டன் ஒன்றுக்கு ரூ.3,307.80 என்ற FRP தொகையுடன், தமிழக அரசின் ஊக்கத் தொகையும் தனியாக வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில் 4 அடி அகலப்பார் முறையில் கரும்பு பயிரிட வேண்டும் என்றும், ஆலைக்கு வழங்கப்படும் கரும்பில் சோகை, வேர், போத்து போன்றவை நீக்கப்பட்டு சுத்தமான கரும்பு மட்டும் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால் கரும்பின் சர்க்கரை கட்டுமானம் அதிகரித்து, விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கரும்பு போக்குவரத்திற்காக தேவையான லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆலை வளாகத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் பங்க் ஒன்று ஆலையின் நிர்வாகத்தின் மூலம் இயக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வி.இரவி, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் திரு.பி.கே.முரளி, ஆலையின் அலுவலர்கள், கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், ஆலை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)