தருமபுரி, டிச.24:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (24.12.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருமதி. கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர், தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதில், நுகர்வோராகிய நாம் நுகர்வியல் கல்வியை அறிவதோடு நுகர்வோருக்குரிய உரிமைகளை நிலைநிறுத்தப் பாடுபடுவோம்; தரமான மற்றும் பாதுகாப்பான பொருட்களையே வாங்குவோம்; வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் இரசீது (Bill) பெறுவோம்; தேவைக்கேற்ற நுகர்வை மேற்கொள்வோம்; பொறுப்புள்ள மற்றும் கடமையுள்ள நுகர்வோராக செயல்பட ஒன்றுபடுவோம்; நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்–2019-ஐ பின்பற்றி நமது உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வோம்; அடிப்படை உரிமைகள் குறித்து அறிவு பெறுவோம்; நுகர்வோர் கல்வியை பரப்புவோம்; எல்லா நிலையிலும் விழிப்புடன் செயல்படுவோம்; விழிப்புணர்வு மிக்க நுகர்வோரே அதிகாரம் மிக்க நுகர்வோர் என்பதை உணர்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா அவர்கள் வாசிக்க, அதனை தொடர்ந்து அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் ஒருமனதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. மு. கதிரேசன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் திரு. ஆ.க. அசோக்குமார், வட்டாட்சியர் திரு. சுகுமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

.jpg)