தருமபுரி – டிசம்பர் 23
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (MSME) சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES) மற்றும் கலைஞர் கைவினைத் திட்டம் (KKT) தொடர்பான விழிப்புணர்வு முகாம், ரெ.சதீஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் கலந்து கொண்ட 48 பயனாளிகளுக்கு ரூ.105.00 இலட்சம் மதிப்பிலான வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அவர்கள் வழங்கினார். முகாமில் உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES), அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் பொருளாதார பங்கு மாநில வளர்ச்சியில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ், 18 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். கல்வித் தகுதி அவசியமில்லை என்றும், உற்பத்தி, வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 இலட்சம் வரை வங்கி கடன், அதில் 25 சதவீதம் மானியமாக (அதிகபட்சம் ரூ.2 இலட்சம்) வழங்கப்படும் என்றும் அவர் விளக்கினார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பாரம்பரிய கைவினை கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டம் (KKT) பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இன்றைய முகாமில்,
-
TWEES திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு ரூ.49.00 இலட்சம்,
-
கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு ரூ.11.00 இலட்சம்,
-
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.75.00 இலட்சம்
என மொத்தமாக 48 பயனாளிகளுக்கு ரூ.105.00 இலட்சம் வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொ) திரு. பா. சுப்பையா பாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. எஸ். இராமஜெயம், மாவட்ட தொழில் மைய கடன் ஆலோசகர்கள் திரு. ஜே.சி. கிருஷ்ணன், திரு. கே. கருணாநிதி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கலாவதி, மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமதி இரா. வாசுகி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், வங்கியாளர்கள், MSME கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

.jpg)