தருமபுரி – டிசம்பர் 23
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “நல்லோசை – களமாடு கலைக்கொண்டாட்டம்” கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இந்த களமாடு கலைக்கொண்டாட்ட விழாவின் ஒரு பகுதியாக மேடை மற்றும் அரங்கம் சாரா நிகழ்வுகள் நடத்தப்பட்டன. பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, இசைக்கருவி வாசிப்பு, ஒரங்க நாடகம், முக ஓவியம், ரங்கோலி போன்ற மேடை நிகழ்வுகளும், புகைப்படம் எடுத்தல், கவிதை எழுதுதல், கதை எழுதுதல், பழைய பொருட்கள் – புதிய கலைகள், ஓவியப்போட்டி உள்ளிட்ட அரங்கம் சாரா நிகழ்வுகளும் நடைபெற்றன. அதேபோல் பேட்மின்டன், கைப்பந்து, எறிபந்து, சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, பல்திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தப் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயங்களை வழங்கி ஊக்குவித்தார். மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி தேன்மொழி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொ) திரு. பா. சுப்பையா பாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. எஸ். இராமஜெயம், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கலாவதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

.jpg)