தருமபுரி | டிசம்பர் 27:
தருமபுரி இந்திய தொழிற்சங்க மையம் அலுவலகத்தில் ஜாக்டோ–ஜியோ மாவட்ட அமைப்பின் சார்பில் மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அறிவித்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
மேலும், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாததால் ஏற்படும் அநீதிகளை களைந்து, சமச்சீர் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட மொத்தம் 10 அம்ச கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 2026 ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

.jpg)